பாடல் எண் :1535
பொன்னொத் தனிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானு மறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே.

9
பொ-ரை; பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும், அளைவீசும் கடைலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப்படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை "என் தந்தையே" என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும்.
கு-ரை; பொன்னொத்த நிறத்தான்-பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமன். பொரு- அலைகளால் சண்டையிடும். கடல் தன்னொத்த நிறத்தான் - கடல்வண்ணனாகிய திருமால், அறிகிலா- அறிய முடியாத புகலூர் என்க. புன்னைத்தாது பொழில். புன்னை மலரின் மகரந்தம் செறிந்த சோலை; என்னத்தா என - என் தந்தையே என்று கூற. தீரும்-நீங்கும்.