பாடல் எண் :1536
மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்பு லூரைத் தொழுமினே.

10
பொ-ரை; மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும், முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் எத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
கு-ரை; மத்தனாய் - உன்மத்தனாய். எத்தினான்-எற்றினான் என்பதன் திரிபு. தூக்கி அகற்ற எண்ணியவன். இற - நெரிய. விரலால் ஒத்தினான்- கால்விரலை ஊன்றினான். ஒற்றினான் ஒத்தினான் என்றாயது. ஒருங்கு ஏத்தலும் - பின்னர் இறுமாப்பொழிந்து ஒருசேர வணங்குதலும். பொத்தினான்-காப்பாற்றினான்.