பாடல் எண் :1539
ஊனி லாவி யியங்கி யுலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானுலாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.

3
பொ-ரை; கச்சி ஏகம்பர், உடல்கள்தோறும் உயிராய் இயங்கி உலகமெல்லாம் பொருந்திய இயல்பினை உடையவராயினும், வானமெங்கும் உலாவிய இசை விளங்கும் படியாக வெவ்விய சுடுகாட்டில் நட்டமும் ஆடுவர்.
கு-ரை; ஊனில் ஆவி-உயிர்கள் உடலினுள் பொருந்தி. இயங்கி -இயங்க என்பது இயங்கி எனத் திரிந்தது. உலக முழுவதும் தானு லாவிய தன்மையர் ஆயினும்-தான் நிறைந்த தன்மையை உடையவர் ஆனாலும். வாலுலாவிய பாணி - ஆகாயமெங்கும் உலவும் தாள ஓசை. பிறங்க-விளங்க. வெங்கான்-கொடிய இடுகாடு.