பாடல் எண் :1544
பண்ணி லோசை பழத்தினி லின்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே.

8
பொ-ரை; கச்சியேகம்பத்து இறைவன் பண்ணின் இசையாகவும் பழத்தில் இனிய சுவையாகவும், பெண் ஆண் என்று ஒருபாற்படுத்திப் பேசுதற்கு அரியவனாகவும் , வண்ணம் இல்லாதவனாகவும், வடிவம் வேறாயவனாகவும், கண்ணினுட் கருமணியாகவும் உள்ளான்.
கு-ரை; பண்-இராகம். ஓசை-சுரம். பண்ணில் ஓசையும், பழத்தினில் இனிய சுவையும் பிரிவின்றியிருத்தல் போல நும்மொடு உடனாயிருப்பவன். பெண் என்றாயினும், ஆண் என்றாயினும் சொல்லுதற்கியலாதவன். வண்ணமில்லி-தனக்கென ஒரு நிறமில்லாதவன். வடிவு வேறாயவன்-தனக்கென ஒரு வடிவமில்லாதவன். வேறாதல்-இங்கு இன்மையைக் குறித்தது. கண்ணிலுண்மணி -கண்ணின்பாவை மணியை ஒத்தவன், இப்பாடல் இறைவன் உயிர்களுள் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் நிலையும் காட்டுவிக்கும் நிலையும் உணர்த்தப்படுவது.