பாடல் எண் :1549
அருந்தி றல்அம ரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.

2
பொ-ரை; அரிய திறலை உடைய தேவர்களும், திருமாலும், பிரமனும் திருத்த முறநின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப் பொருந்த சென்ற வழிபடற்கு எழுவோமாக.
கு-ரை; அருந்திறல்-பெறுதற்கரிய வலிமை. திருந்த நின்று-வழிபாட்டு முறையில் செம்மையாக நின்று. பொருந்தச் சென்று புடைபட்டு -ஏகம்பத்தை அடையச் சென்று அமைந்து எழுதும்-உயர்வு பெறுவோமாக.