பாடல் எண் :1552
சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாயன லாய்ப்புனல் வானமாய்ப்
புந்தி யாய்ப்புகுந் துள்ள நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

5
பொ-ரை; சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு, அந்தியாகவும், அனலாகவும், புனலாகவும், வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து, உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக.
கு-ரை; ஒளித்த சிந்தை -உயிரறிவு. சிவம்-இன்பம். செம்மை - பிறழாமை. அந்தியாய் - அந்திக்காலமாய். புந்தி-அறிவு,