பாடல் எண் :1557
அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவ னேகம்பம்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.

10
பொ-ரை: தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைழு சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெரித்தவனும், அவனது இரக்கத்திற்குரிய இன்னிசையைக் கேட்டருள் புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவேகம்பத்தை நாம் அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக.
கு-ரை: அரக்கன் - இராவணன். தன்வலி உன்னி - தன் ஆற்றலை எண்ணி. நெருங்கி நெருங்கி என்று வலித்தல் விகாரம் பெற்றது. இரக்க இன்னிசை - இரக்கத்தோடு அவன்பாடிய இனிய இசை. சாரகானம். கேட்டவன் - கேட்டருள் புரிந்தவன். தருக்கதாக - அருள் இறுமாப்பு. அடியோம் என்ற பெருமித நினைவு.