|
பாடல் எண் :1571 | தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன் அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார் உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே. |
| 3 | பொ-ரை: தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன்; "அஞ்சாதே! உன்னை அழைக்க வந்தேன்" என்று அருளினார்; 'உய்ந்தேன்' என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன்; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ? கு-ரை: தஞ்சே கண்டேன் - எளிமையாகவே கண்டேன், தரிக்கிலாது - தாமதியாது. ஆர் என்றேன் - நீவிர் யார் என்று கேட்டேன். அஞ்சேல் - அஞ்சாதே; உன்னை அழைக்க வந்தேன் என்று கூறினார். உஞ்சேன் - உய்ந்தேன் என்பதன் போலி. உகந்தே எழுந்து - மகிழ்வோடு எழுந்து. ஓட்டந்தேன் - ஓடினேன். ஓட்டந்தந்தேன் என்பதன் மரூஉ. வஞ்சேவல்லர் - வா என்று சொல்லி மறைந்த வாய்மூர் இறைவர் வஞ்சித்தலில் வல்லவர். வஞ்சம் என்பது ஈறு குறைந்தது. |
|