பாடல் எண் :1573
ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென்
றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலக் கரந்ததே.

5
பொ-ரை: ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு, திருவாய் மூரின்கண் தெளிந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே.
கு-ரை: ஒள்ளியார் - அறிவு வடிவமாயிருப்பவர். தெள்ளியார் - தெளிந்த பேரறிவாளர்; இவர் திருவாய்மூர்த் தெள்ளியார் இவர்போலத் தோன்றி என்க. கள்ளியாரவர்போல - கள்ளத் தன்மை உடையவர்போல. கரந்ததே - மறைந்ததே; என்கொலோ என்பதைத் தந்து முடிக்க.