|
பாடல் எண் :1575 | பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா ஓடிப் போந்திங் கொள்ளித்தவா றென்கொலோ. |
| 7 | பொ-ரை: பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய்மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னேயோ? கு-ரை: பாடிப்பெற்ற - திருவீழிமிழலையில் பஞ்சமேற்பட்ட காலை மிழலை இறைவரிடம் சம்பந்தர் பாடிப்பெற்ற பரிசில். பழங்காசு - பரிசிலாகப் பாடி வாங்கிய பழையவாகியவாசிக் காசுகள். வாடி வாட்டம் - வாடியவாட்டம் என்று பிரித்து மனம் வாடிய வருத்தம் என்க. தவிர்ப்பார் - நீக்கிய இறைவர். அவரைப்போல் முதலில் மாற்றுக் குறைந்த காசு வழங்கிப் பின் வருத்தந்தணித்து நற்காசு வழங்கிய மிழலை இறைவரைப்போல முதலில் துன்பம் தந்து பின்பு இன்பம் தரும் திருக்குறிப்புப்போலும் என்க. என்னைத் தேடிக்கொண்டு திருவாய்மூர்க்கே எனா - தேடிக்கொண்டு வந்து திருவாய்மூர்க்கே போவோம் என்று சொல்லி. |
|