பாடல் எண் :1585
குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.

7
பொ-ரை: மருவிய புதுமலர்களாகிய மல்லிகையும் செண்பகமும் உதிர்ந்து பரவிய நீர்ப்பரப்பை உடைய பொன்னிக் கரையிலுள்ள திருப்பாலைத்துறையர்,கொடுகொட்டி, கொக்கரை, பண் பொருந்திய வீணை ஆகிய வாச்சியங்களின் இசையினை விரவியவரும், குரவரும் ஆவர்.
கு-ரை: குரவனார்-குருவாக இருப்பவர். பண்-இசை.கெழுமிய-பொருந்திய. மருவு-அணிந்த, பொருந்திய. நாண்மலர் - புது மலர். மலராகிய மல்லிகை சண்பகம் என்க. பரவு-பரவிய.