பாடல் எண் :1601
பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியைச்
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

2
பொ-ரை: பண்வடிவானவரும், பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும், தேவர்கள் தொழும் முதல்வரும், திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
கு-ரை: பண்ணினை - இசை வடிவானவனை. பவளமாமணித்திரள் - பவளமணிக்குவியல் போன்ற. ஆதியை - முதன்மையானவனை. நண்ணில் அல்லது - சென்று தொழுதால் அல்லாமல். சுண்ணம் - வாசனைப்பொடி. வெண்பொடியையே வாசனைப் பொடியாக அணிந்தவர்.