பாடல் எண் :1620
தாரித் துள்ளித் தடமல ரெட்டினால்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.

9
பொ-ரை: வலிமை உடையதாய்த் தெளிந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான், மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார்.
கு-ரை: தாரித்து - தரித்து என்பது தாரித்து என நீண்டது. தரித்தல் - மனத்திற்கொள்ளல். தடமலர் - பெரிதாகிய மலர். பாரித்து - மிகுந்து. பாற்றுவார் - கெடுப்பார். மூரி - பெரிய. வேரி - தேன் பொருந்திய மலர்கள். வேய்ந்த - கட்டிய.