பாடல் எண் :1623
புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தென்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலு மம்ம வழகிதே.

2
பொ-ரை: தெளிந்த நீர்வளம் உடைய நாரையூரின் கண் எழுந்தருளியுள்ள பெருமான், புள்ளிகளை உடைய புலித்தோலாடையும், வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும், நஞ்சைஅள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.
கு-ரை: புள்ளிகொண்ட-புள்ளிகளைக்கொண்ட. புலியுரி-புலித்தோல். வெள்ளி கொண்ட வெண்பூதி-வெள்ளியின் நிறத்தைக் கொண்ட வெண்மையான விபூதி. நள்ளி-விரும்புபவன் ஆகிய நாரை யூரான் என்க.