பாடல் எண் :1630
முரலுங் கின்னர மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுலாம்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுத லம்ம வழகிதே.

9
பொ-ரை: ஒலிக்கின்ற கின்னரமும், மொந்தையும் முழங்க, நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும், அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.
கு-ரை: முரலும்-இனிய ஓசையோடு ஒலிக்கும். கின்னரம்- ஒருவகை வாத்தியம். மொந்தை-தோற்பறை. நரலும்-ஆரவாரிக்கும். வாரி-கடலால் சூழப்பட்ட உலகின்கண் பொருந்திய எனக் கூட்டுக.