|
பாடல் எண் :1632 | மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் தொக்க கையினன் செய்யதோர் சோதியன் கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி நக்க னைத்தொழ நம்வினை நாசமே. |
| 1 | பொ-ரை: மையணிந்த கண்களையுடைய உமையை ஒருபங்கில் உடையவனும், மானும் மழுவும் பொருந்திய கைகளை உடையவனும், செவ்விதாகிய ஒப்பற்ற ஒளி வடிவினனும், மாமரங்கள் பொருந்திய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் உறையும் திகம்பரனுமாகிய பெருமானைத் தொழ நம்வினைகள் நாசமாம். கு-ரை: மைக்கொள் கண்-கருமை நிறத்தைக்கொண்ட கண்கள். மையுண்ட கண் எனினும் பொருந்தும். மான், மழு இவை பொருந்திய கையையுடையன் என்க. செய்யதோர் சோதியன்-சிவந்த பேராளியாகிய வடிவினன். கொக்கு அமர்-கொக்குக்கள் தங்கிய மாமரம் எனினும் அமையும். நக்கன்-நிருவாண கோலத்தை உடையவன், நாசம் -நாசம் ஆம்; அழியும். |
|