|
பாடல் எண் :1638 | சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலால் கூத்த னாருறை யுந்திருக் கோளிலி ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே. |
| 7 | பொ-ரை: பெருமைமிக்க நல்ல மனைவியும், பெற்ற பிள்ளைகளும், பொருந்திய சுற்றத்தாரும் நிலைத்த சார்பு ஆதல் இல்லையாதலால் ஆடும் பெருமான் உறையும் திருக்கோளிலியை ஏத்தி, நீர் தொழுவீராக; நும் இடர்கள் தீரும். 'இறைவனே இருமைக்கும் நீங்காத்துணை' என்றபடி. கு-ரை: சீர்த்த - சிறப்பின் மிக்க. ஆர்த்த - நம்மோடு ஒன்றாய்ப் பிணித்த. ஆரவாரம் செய்யும் எனினும் அமையும். பற்றிலை - பற்றுக்கோடாதல் இல்லை. இடர் - துன்பம். மனைவி, மக்கள், சுற்றம் என்போர் உயிர்த்துணையாகார். உயிர்க்கும் உடலுக்கும் நிலைத்த துணைவன் சிவபிரானே என்றபடி. தீருமே - ஏகாரம் தேற்றம். |
|