பாடல் எண் :1639
மால தாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனம்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.

8
பொ-ரை: மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதற்கு முன்னம், அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக! 'யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க!' என்றபடி.
கு-ரை: மாலதாகி - உலகப் பொருள்களில் மயக்கத்தைப் பொருந்தினவராகி. காலம் வந்து கடைமுடியாமுனம் - இறத்தற்கு உரிய காலம் வந்து இறுதியாக உம் வாழ்வை முடித்தற்கு முன். கோலம் - அழகிய. வார் - நீண்ட.