|
பாடல் எண் :1641 | மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை அடர்த்துப் பின்னு மிரங்கி யவற்கருள் கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே. |
| 10 | பொ-ரை: செருக்கை உட்கொண்டு திருக்கயிலாயப் பெருமலையை எடுக்கலுற்றானாகிய இராவணனை நெருக்கிப் பின்னும் இரக்கமுற்று அவனுக்கு அருள்கொடுத்த பெருமான் உறைகின்ற கோளிலியே தொழப் பழைய பிறவிகளிற் செய்த வினைத் துன்பங்கள் விடுத்து நீங்கும். 'பிழைத்தாரையும் பின்னர் இரங்கி வந்தடையில் முதல்வன் காத்தருள்வான்' என்பது குறிப்பு. கு-ரை: மடுத்து -தான் என்னும் செருக்கை உட்கொண்டு. மா - சிறப்பிற்குரிய. மேலைவினைகள் - பழவினைகள். விடுத்து - நம்மை விட்டு; வினைகள் நீங்கிடும் என்க. மடுத்து - என்பதற்குரிய செயப் படு பொருள் அவாய் நிலையான் வந்தது. |
|