|
பாடல் எண் :1642 | முன்ன மேநினை யாதொழிந் தேனுனை இன்னம் நானுன சேவடி யேத்திலேன் செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி மன்ன னேயடி யேனை மறவலே. |
| 1 | பொ-ரை: செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! (தியாகராசனே!) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன்; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை; ஆயினும் அடியேனை மறவாதே; என்னை நினைந்தருள்வாயாக! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி. கு-ரை: முன்னமே - காலம் வறிதே கழியாத முன்பே; உனை நினையாதொழிந்தேன் என்க. இன்னம் - இன்னமும். உன - உன்னுடையவான (அ-ஆறன் உருபு). மறவல் - மறவாதே. |
|