|
பாடல் எண் :1646 | மூல மாகிய மூவர்க்கும் மூர்த்தியைக் கால னாகிய காலற்குங் காலனைக் கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச் சூல பாணிதன் பாதந் தொழுமினே. |
| 5 | பொ-ரை: மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும், காலகாலனும், அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக. கு-ரை: மூவர்க்கும் மூலமாகிய மூர்த்தியை என மாறுக. காலனாகிய காலன் - காலத்தை வரையறுப்பவனாகிய இயமன். சூலபாணி - சூலத்தைக் கையின்கண் ஏந்தியவன். சிவபிரானே தத்துவங்கடந்த முதற்பொருளும் சமயத்தாரால் தொழப்படும் தெய்வமும் என்றபடி. |
|