பாடல் எண் :1650
மாலும் நான்முக னாலு மறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.

9
பொ-ரை: மாலும் பிரமனும் அறியவியலாத, பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக.
கு-ரை: அறிவொணா - அறியமுடியாத. பாலின் மென்மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி. நித்தல் நாடோறும்.