பாடல் எண் :1652
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.

1
பொ-ரை: தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக.
கு-ரை: கையர்-வஞ்சனையுடையவர்கள். தலையெல்லாம்-தலையிலுள்ள உரோமங்கள் எல்லாவற்றையும் தலை-ஆகுபெயர். பறிக்கும்-ஒவ்வொன்றாகக் களையும். தலைமயிரைப் பறித்தல் சமணர் இழிவழக்கு. சமண்கையர்-கையையுடைய சமணர். கை- ஓழுக்கமுமாம். உள்நிலையினால்-தங்கள் பொய்மை நிலைமையினால். மறைத்தால்-மறைக்க முயற்சித்தால். மறைக்கொண்ணுமோ- மறைத்தற்கியலுவதொன்றாமோ. ஏகாரவினா எதிர்மறை குறித்தது. அலையினார்-அலைகள் பொருந்திய; நீர்வளம் சான்ற. அலை-ஆகுபெயர் அல்லது அலைக்கண்மருங்கே என்க. நிலையினான்-எழுந்தருளி இருப்பவன். சமணர்கள் பழையாறை வடதளித் திருக்கோயிலில் இருந்த பெருமானை மறைத்து வைத்திருந்தகாலையில், அங்குச் சென்ற அப்பர், பெருமானைக் காணாது உண்ணா நோன்பு கொண்டு பின்பு இறைவன் காட்சிதரப் பாடியதாதலின் இப்பாடலில் மறைத்தால் மறைக்கவொண்ணுமோ என்றார்கள்.