பாடல் எண் :1654
குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.

3
பொ-ரை: குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், உடையணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும்,தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீல கண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன.
கு-ரை: குண்டர்-கொழுத்தவர். குணமில்லர்-நற்குணமில்லாதவர். கூறை - ஆடை. இல்-இல்லாத. மிண்டர் - வலியர். உடையின்றித் திரிதல் சமணகுருமார்வழக்கு. துரந்த-நீக்கிய, அரசனைக் கொண்டு ஒழித்த. விமலன் - குற்றமற்றவன். அண்டர்- தேவர் வடதளிக் கடரை- பழையாறை வடதளியாகிய தலத்தில் உறைபவரை.