|
பாடல் எண் :1656 | ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புன லாறை வடதளி வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே. |
| 5 | பொ-ரை: ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும், கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச்சேறாகிய நீர்வளம் உடைய பழையாறை வடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும். கு-ரை: ஒள்ளரிக்கண்ணார்-ஒளியோடு கூடிய செவ்வரி படர்ந்த கண்களையுடைய பெண்கள். அமணேநின்று-அம்மணமாகி நின்று. உணும் -உண்ணும். கள்ளரை-கள்ளத்தனமுடையவர்களை. உடையின்றிப் பெண்களிடம் உணவிரக்கும் சமண வாழ்க்கையைக் கருதியது. கடிந்த மகளிர் இடும் பிச்சையை ஏற்று காமமாதிகளை உள்வைத்து நிர்வாணராய் உண்ணும் சமணத் துறவியரை வெறுத்த கரும்பு ஊறலை-கருப்பஞ்சாறு போன்றவனை. அள்ளல்புனல் - சேற்று வளம் சான்ற நீர் வாடும் - வருந்தும். |
|