|
பாடல் எண் :1666 | வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன் வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே. |
| 5 | பொ-ரை: கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும், இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும், நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும், நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கை தொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர். கு-ரை: வார்கொள் - கச்சணிந்த. வார்கொள்நன்முரசும் - வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முரசம். அறை - வண்டுகள் ஒலிக்கும். வார்கொள் - நீண்ட பொழில். மன்னுவர் - நிலைபெறுவர். |
|