|
பாடல் எண் :1668 | மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத் தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு தொழவ லார்தமக் கில்லை துயரமே. |
| 7 | பொ-ரை: மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திருநாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற்பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை. கு-ரை: மழுவலான் - மழுவாயுதத்தை வலக்கரத்தே ஏந்தியவன். திருநாமம் - திருவைந்தெழுத்து. வழுவில் - குற்றமில்லாத. அன்பு செய்து அழவலார்களுக்கு, இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் என்க. |
|