பாடல் எண் :1673
அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே.

2
பொ-ரை: நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிருநீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்.
கு-ரை: நிச்சலும் - நாடோறும். நித்தல் என்பதன் மரூஉ. நினையாய் - நினைப்பாயாக. கச்ச - கைத்த என்பதன் மரூஉ. எல்லோர்க்கும் கசந்த. மா - கரிய. என - என்று சொல்ல. வைச்சமாநிதி - சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன் தருவர்.