|
பாடல் எண் :1674 | சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. |
| 3 | பொ-ரை: சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர். கு-ரை: சிவபெருமானிடத்து அன்பும் நினைப்பும் இல்லாதொழியின் யாவும் பயன்தரா என்று கருத்து விளக்கப்படுகிறது. சாத்திரம் - சமய இலக்கண வரம்பு. சழக்கர் - அறிவற்றோர்; பொய்யர். கோத்திரம் - சிறந்தார் ஒருவரின் பரம்பரையைச் சுட்டியுரைப்பது. குலம் - சாதி. பாத்திரம் - வணங்கப்படுதற்குரியவர். பணிதிரேல் - பணிவீரேயானால். மாத்திரைக்குள் - கணப்பொழுதிற்குள். சாத்திரம் கோத்திரம் குலம் முதலாயினவற்றையே கருதி உண்மைப் பொருளை உணரும் பயனை அறியாதொழுகினாரை வெறுத்தது. இதுகொண்டு இவற்றை வெறுப்பதாகக் கூறல் தவறு. தம்மை மறந்த நிலையில் தாமே அவை நீங்கும், தூங்கினவன் கைப்பொருள்போல என்பதாம். |
|