பாடல் எண் :1676
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.

5
பொ-ரை: உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர்.
கு-ரை: சாற்றிச் சொல்லுவன் - பலருமறியக் கூறுவன். தரணியீர் - உலகத்தவர்களே. மாற்றிலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த.