பாடல் எண் :1682
அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும்பர விப்பணி வார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.

3
பொ-ரை: அரிசிலாற்றுக்கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை, வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும்; காண்பீராக.
கு-ரை: அரிசிலின் - அரிசிலாற்றின். அணி ஆர்தரு - அழகு பொருந்திய. புரிசை - மதில்களோடு கூடிய. புனிதன் - தூயன். பரிசொடும் - நல்ல தன்மையோடும். பரவி - தோத்திரித்து. பணிவார்க்கெல்லாம் - வணங்குவார் எல்லாருக்கும். துரிசில் நன்னெறி - குற்றமற்ற நல்ல வீட்டுநெறி. தோன்றிடும் - உண்டாம்.