பாடல் எண் :1684
அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் விட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.

5
பொ-ரை: கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி, நல்ல பக்தி கொண்டு, திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும்; காண்பீராக.
கு-ரை: அரும்புபோல் - தாமரையரும்புபோலும். அருப்பு - வலித்தல் விகாரம். அல்லல் - துன்பம் தருகின்ற. விருப்புச் சேர்நிலை - விருப்பம் சேர்க்கும் தன்மை. நல்லிட்டமாய் - நல்ல விருப்பத்தோடு. சிந்தை செயச்செய - மனத்தால் நினைக்க நினைக்க. அண்ணிக்கும் - இனிக்கும்.