பாடல் எண் :1696
உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை
அம்ப ரானை யமலனை யாதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.

7
பொ-ரை: தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும், உருத்திரமூர்த்தியும், அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும், மலம் அற்றவனும், ஆதியானவனும், சங்குகளையுடைய நீர்பாயும் கடுவாய்க்கரைக்கண் தென்புத்தூரில் உள்ளவனும் ஆகிய எம்பெருமானைக் கண்டதனால் அடியேற்கு இன்பம் ஆயிற்று.
கு-ரை: உம்பரானை - தேவர்கள் தலைவனை. உருத்திர மூர்த்தியை-அழித்தற்கடவுளாய்ச் சங்காரகாரணனாயிருப்பவனை. அம்பரானை - ஆடையணிந்தவனை அல்லது அம்பரனை எனப் பிரித்து அழகிய மேலானவனை என்க. அம்பர் என்னும் தலத்திலிருப்பவனை எனலுமாம். அமலன்-குற்றமற்றவன். ஆதியை - முழுமுதற் கடவுளை. கம்பு நீர் - சங்குகளை உடைய நீர்.