|
பாடல் எண் :1704 | ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் காலத் தான்உயிர் போக்கிய காலினன் நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி கோலத் தான்குரங் காடு துறையனே. |
| 5 | பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை உடையவனும், நீலநிறம் நிறைந்த திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை உடையவனும் ஆவன். கு-ரை: ஞாலத்தார் -உலகத்தார். காலத்தான்-காலன், இயமன். நீலம் ஆர்மிடறு -நீலக்கறை பொருந்திய கழுத்து; அத்து சாரியை. |
|