|
பாடல் எண் :1706 | மாத்தன் தான்மறை யார்முறை யான்மறை ஓத்தன் தாரகன் றன்னுயி ருண்டபெண் போத்தன் தானவன் பொங்கு சினந்தணி கூத்தன் தான்குரங் காடு துறையனே. |
| 7 | பொ-ரை: வேதங்களில் கூறிய முறையால் மாற்றுயர்ந்த பொன்போன்றவனும், வேதசாகைகளை அருளிச்செய்தவனும், தாரகனை அடக்கிய காளியைவென்ற வீரனும், முயலகனது சினத்தைத் தணித்த கூத்தனுமாய் விளங்குபவன் குரங்காடுதுறை இறைவன். கு-ரை: மாத்தன்-பொன்னின் உயர்ந்த மாற்றுப் போன்றவன்; பெரியவன். மறையார் முறையால் -வேதங்களிற் பொருந்திய இலக்கண நெறியால் தான் மாத்தன் என மாற்றுக. மறைஓத்தன் - வேதமாகிய உண்மை நூலை உடையவன். தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்து - தாருகன் என்ற அரக்கனை அழித்து அவனுடைய உயிரைப் போக்கிய காளியை வென்ற. போத்தன் -வீரன். போத்தன் தானவன் - வீரத்துடன் வந்த முயலகன். சினம் -இருவருடைய கோபத்தை. தணி - அடக்கிய. கூத்தன் -திருக்கூத்தாடுபவன். |
|