|
பாடல் எண் :1712 | கயிலை நன்மலை யாளுங் கபாலியை மயிலி யல்மலை மாதின் மணாளனைக் குயில்ப யில்பொழிற் கோழம்பம் மேயவென் உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே. |
| 2 | பொ-ரை: திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும்ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது. கு-ரை: கபாலி - பிரமகபாலத்தை ஏந்தியவன். மயிலியல் - மயிலின் சாயல்தன்மை. பயில் - தங்குகின்ற. உயிரினை - உயிராயிருப்பவனை. |
|