|
பாடல் எண் :1714 | பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந் தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே. |
| 4 | பொ-ரை: வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகியஇறைவனுக்கு இப்பெண் அன்றே அன்புபட்டாள் ஆதலின், பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள். கு-ரை: பண்ணொடு பாடலாக்கிடும் - பண்ணோடு பாடச்செய்யும். கூடலாக்கிடும் - கூடல் விளைந்திடச்செய்யும். கூடல் - பெண்கள் தன் எண்ணம் நிறைவேறுமோ அன்றிப் பிறிதாமோ என அறிய நிலத்தில் கண்ணை மூடிக்கொண்டு வட்டமிட்டுப் பார்ப்பர். அச்சுழியின் இருமுனைகளும் கூடினால் வெற்றி என்றும் கூடாதொழியின் எண்ணம் பலியாதென்றும் கருதுவர். இதற்குக் கூடலிழைத்தல் என்று பெயர். குன்றின்மணற்கொடு - மலையத் தனை மணலைக் கொண்டு, கூடல் இழைத்திடும் என்க. மலையில் இருக்கும் மணல்களைத் தான் வாழ்வதற்கு இடமாகக்கொண்டு மலரும் கோடல் எனினுமாம். கோடல் - காந்தள். பூத்துஅலர் - பூத்து மலர்கின்ற. பெண்ணிவள் கோழம்பத்துக் கூத்தனுக்கு அன்பு பட்டாளல்லவா அவ்வன்பு, பாடல் கூடல் இவற்றை இவட்கு விளைத்திடும் எனமுடிவு செய்க. |
|