பாடல் எண் :1722
பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

1
பொ-ரை: பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர், தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர்.
கு-ரை: புனிதன் - தூயவன். நூறுநூறாயிரம் - ஒரு கோடி. நண்ணினார் - ஓதியவர். பாறி - அழிந்து. பறைய - நீங்க. ஏ அசை. தேவர்கோ - இந்திரன்.