|
பாடல் எண் :1723 | என்ன னென்மனை யெந்தையெ னாருயிர் தன்னன் தன்னடி யேன்தன மாகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் இன்ன னென்றறி வொண்ணா னியற்கையே. |
| 2 | பொ-ரை: பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன்; என் மனையாளாகவும் உள்ளவன்; என் தந்தை; என் உயிர்; தனக்குத்தானே உவமையானவன்; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன்; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன். கு-ரை: என்னன் - எனக்குற்ற துணையாயிருப்பவன். என்மனை - என்மனைவி போன்றவன். "அப்பன்நீ அம்மை நீ ........... ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ" (தி.6.ப.95.பா.1.). எந்தை - எனக்குத் தந்தையாயிருப்பவன். என் ஆருயிர் - என் அரிய உயிரை. தன்னன் தன்னடியேன் - தனக்குரிய பொருளாயும் தன்னடியவனாயுமுள்ள எனது. தன் - அப்பெருமானுடைய அடியேன் என்க. தனமாகிய பொன்னன் - அடியேனுடைய பெறுதற்கரிய சேமநிதியாகிய பொன்னாயிருப்பவன். இயற்கை - இயல்பு. |
|