பாடல் எண் :1741
கண்ப னிக்குங்கை கூப்புங்கண் மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொன் னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.

9
பொ-ரை: கண்ணீர் ததும்புகின்றாள்; கைகூப்பித் தொழுகின்றாள்; முக்கண்ணுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று சொல்கின்றாள்; வளவிய பொன்னித் தென்கரையில் உள்ள வலஞ்சுழி மேவிய பண்பனாகிய பெருமான் இந்தப் பொன்னனைய தலைவிக்குச் செய்த தன்மை இதுவாகும்.
கு-ரை: பனிக்கும் - நீர் அரும்பும். என்னை நான் கொடுப்பேன் எனும் - என்னை நானே கொடுத்துக்கொண்டு அவனுக்குரிமையாக்கிக் கொள்வேன் என்று சொல்லுவாள். பண்பன் - நற்பண்புகளின் வடிவமாயிருப்பவன். பொனை - பொன் போன்றவளை. தோழி கூற்று.