பாடல் எண் :1744
பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.

2
பொ-ரை: பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக.
கு-ரை: பறப்பை - கருடன் முதலிய பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண். நெய் வைக்கும் பாத்திரம் எனலுமாம். பசு - வேள்விப் பசு. படுத்து - சிறந்த பொருளாகக்கொண்டு நிகழ்த்தி. வேள்வித் தீயின் கண் நெய்யைச் சொரிந்தும், வேள்விச் சாலையின்கண் பசுவுக்கு வாயுறை கொடுத்தும் ஆராதித்தும் செய்யும் வேள்விச் செயல்களை உடையோர் வாழும் ஊர் எனக் குறித்தது. பல திறத்தவும் உடையோர் - பல வேள்விக் கூறுபாடுகளையும் உடையவர்கள். "பறப்பைப் படுத் தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர் வாழ்வதில்லை" (தி.1.ப.80.பா.2) என்றார் சம்பந்தரும். கறைப்பிறை - கறையை உடைய பிறைமதி. கண்ணுதல் - நெற்றிக் கண்ணை உடையவனாகிய பெருமான்.