|
பாடல் எண் :1750 | உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை நள்ளா றாவென நம்வினை நாசமே. |
| 1 | பொ-ரை: உள்ளே தன் நிறம் கெடாததாகிய ஒப்பற்ற தாமரைத் தொகுதியின் தெளிவு நீங்காததாகிய சிவ ஒளிப் பிழம்பினை, தேன் நீங்காத பொன்போன்ற கொன்றைகமழும் சடையினை உடைய "நள்ளாறா!" என்று கூற நம் வினைகள் நாசமாகும். கு-ரை: அகத்தே உள்ள ஆதாரங்களில் நீங்காத தாமரைகளின் தெளிவாகக் காணப்படுகின்ற சிவசோதி. உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் - "ஊறுமருவிய உயர்வரை உச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குள மொன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூவின்றிச் சூடான் புரிசடையோனே" (தி.10.திருமந்திரம்). ஏனைத் தாமரைபோல் நீர்க்கீழ்த்தோன்றாத பீசம்முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை. புண்டரிகத்திரள் - தாமரையின் தன்மைகள் எல்லாம் திரட்டித் தன்னுட்கொண்டது. தெள்ளாறாச் சிவசோதி - தெளிந்த சிவஞானத்தின் வழிகாணும் சிவமாகியப் பேரொளிப் பிழம்பு. கள் அறாத கொன்றை என்க. |
|