பாடல் எண் :1754
உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.

5
பொ-ரை: தேன்மணக்கும் பொழிலை உடைய திருநள்ளாற்றுப்பெருமான் உற்றுப்பொருந்தியவனாய் நிறைந்து உள்ளத்தைக் குளிர்விப்பவன்; இறைவனாகிநின்று எண்ணத்தில் நிறைந்தவன்; மறம் உடையவனாய் அருச்சுனனின் பொருட்டுப் பன்றியின்பின் சென்ற மாயம் என்னையோ?
கு-ரை: உறவனாய் - உறவுடையவனாய்; நன்மை செய்பவனாய். உள்ளம் நிறைந்து - மனத்தின் கண்ணே நிறைந்து. குளிர்ப்பவன் - மனங்குளிரச் செய்பவன். எண் - எண்ணத்தின் கண்ணே. நறவம் - குங்கும மரம்; தேனுமாம். நாறும் - கமழும். மறவனாய் - அருச்சுனனோடு சண்டையிடப் பன்றியைத் துரத்திச் சென்ற வரலாற்றைக் குறித்தது. மாயம் - பொய்ச்செயலாகிய திருவிளையாட்டு.