பாடல் எண் :1755
செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரம்மருள் செய்த சதுரரே.

6
பொ-ரை: சிவந்த வானமும் அழகிற்குத்தோற்று உள்ள மழிதற்குக் காரணமாகிய செஞ்சுடர் வீசும் சோதியரும், திகம்பரருமாகிய பாம்பினை ஆர்த்துக் கட்டிய நள்ளாற்றிறைவர் வக்கராசுரன் உயிர் போக்கியவராகிய திருமாலுக்குச் சக்கரப் படையை அருள் செய்த திறம் உடையவர்.
கு-ரை: செக்கர் அங்குஅழி - செவ்வானத்தின் நிறம் அவ்விடத்து அழிந்து தோன்ற. நக்கர் - நகுதற்குரிய வேடமுடையவர். அங்கு அரவு ஆர்த்த நாதனார் என்க. வக்கரன் விருத்தசர்மனுக்கு சைதேவன் தங்கையாகிய சுருததேவியிடம் பிறந்தவன். இவனும் சிசுபாலனும் சனகசனந்தனர் சாபம் பெற்ற ஜயவிஜயர்களுடைய அவதாரம். இவன் வலிமையடக்கப்பெற்றுக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன். வவ்விய - கொன்ற. மாயன் - திருமால்.