பாடல் எண் :1756
வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.

7
பொ-ரை: நைந்த உள்ளம் உடையவர்களுக்கு அருளும் நள்ளாற்று இறைவர் வஞ்சனைமிக்க நஞ்சினாற் பொலிகின்ற திருக்கழுத்தினர்: தெய்வச் செல்வப்பாவையாகிய உமா தேவிக்கு வேந்தர்: வஞ்சனை உடைய நெஞ்சத்தவர்களுக்கு வழி கொடாதவர்.
கு-ரை: வஞ்சம் - கொல்லும் தன்மையாகிய வஞ்சனையை உடைய. நஞ்சிற் பொலிகின்ற - விடத்தினாலே விளங்குகின்ற. விஞ்சையில் - வியத்தகு செயல்களினால் விளங்கும். செல்வப் பாவை - ஞானச் செல்வியாகிய சிற்சத்தி. வேந்தனார் - கணவர். நஞ்ச - நைந்த; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது. அன்பினால் உருகில் நஞ்சு போன்ற கொடிய மனத்தவர்க்கும் அருள் செய்யும். உம்மை தொக்கது.