பாடல் எண் :1764
உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

5
பொ-ரை: உலகத்தில் உள்ளவர்களே! இதுவே உய்யும்வழி; கேட்பீராக; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும்,மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற, கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
கு-ரை: பை - படம். பாம்பு அரையான் - பாம்பை இடையிலே கட்டியவன். மழுப்படையார் கையினான் என்க. படை - ஆயுதம். கொய்கொள் - கொய்தலைக்கொண்ட. மலர்களையும், இலைகளையும் பறித்தலைக் கொய்கொள் என்றார்.