|
பாடல் எண் :1771 | சுற்ற முந்துணை நன்மட வாளொடு பெற்ற மக்களும் பேண லொழிந்தனர் குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார் பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே. |
| 2 | பொ-ரை: சுற்றத்தாரும், வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால், குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒருபற்று மற்று இல்லை. கு-ரை: சுற்றமும் - சுற்றத்தினரும். துணை - துணைவியாகிய. பேணலொழிந்தனர் - விரும்புதலைத் தவிர்ந்தனர். பற்றலால் ஒருபற்று மற்றில்லை - இறைவனே பற்றுக்கோடாவான் வேறு ஒரு பற்றுக்கோடில்லை. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள். 350) " என்னிலாரும் எனக்கினியாரிலை" (தி.5.ப.21.பா.1.) உலகில் இறைவனது சார்பில்லாது பிறிது ஒரு சார்பில்லை என்று அநுபவம் காட்டியவாறு. |
|