|
பாடல் எண் :1778 | அயிலார் அம்பெரி மேருவில் லாகவே எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன் குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப் பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே. |
| 9 | பொ-ரை: மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய, குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர். கு-ரை: அயிலார் அம்பு - எரி கூர்மை பொருந்திய அம்பு அக்கினிதேவனாக. திரிபுரமழிக்கச் சென்றகாலையில் அக்கினிதேவன் அம்பாயினான் என்ற கதைக்குறிப்பைக் கொண்டது. மேரு - இமயம். எயிலாரும் - திரிபுரக் கோட்டையில் உள்ளவரும். பொடியாய் விழ - தூளாகிக் கீழே விழ. பயில்வாரும் - வழிபடுவார்களும். உம்மையால் புகழ் கூறுபவர்களோடு மனம், மெய், அறிவு ஆகியவற்றால் வழிபடுபவர்களையும் கொள்க. பாலர் - தன்மையை உடையவர். |
|