பாடல் எண் :1783
திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.

4
பொ-ரை: விசயமங்கையில் உள்ள மிகப் பழையவனாகிய பெருமான், திசைகள் எங்கும் குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன்; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து மயங்கி விழுந்தனன் கூற்றுவன்.
கு-ரை: திசையும் - எட்டுத் திசைகளும். எங்கும் - எல்லா உலகங்களும். குலுங்க - நடுங்க. அசைய அங்கு எய்திட்டுத் திரிபுரங்கள் ஆடி அசையும்படி அவை இருக்கும் இடம் சென்று அடைந்து. ஆர்அழல் - அணைப்பதற்கு அரிய நெருப்பை. விருத்தன் - மிக முதியன். முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளானவனாதலின் விருத்தன் என்றார். புறத்தடி - புறக்காலால். விசையின் - விரைவாக. மங்கி - ஒளி மங்கி.