|
பாடல் எண் :1796 | கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே. |
| 7 | பொ-ரை: கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட, என்வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன். கு-ரை: கல்லினோடு - கருங்கல்லோடு. எனை - என்னை. பூட்டி - சேர்த்துக்கட்டி. அமண் கையர் - அமண் ஒழுக்கத்தையுடையவர். அதாவது நிர்வாண ஒழுக்கத்தினர். ஒல்லை - விரைந்து. நீர்புகநூக்க - கடலின்கண்ணே அழுந்தும்படியாகத் தள்ளிவிட. நெல்லு நீள் - நெற்கதிர்கள் பெருகியுள்ள; நவிற்றி - சொல்லி. உய்ந்தேனன்றே - உய்ந்தேனல்லவா? திருநாவுக்கரசு சுவாமிகள் கல்லிற் பிணைத்துச் சமணர் கடலில் தள்ளியபோது தாம் திருவருளால் கரையேறிய அற்புதத்தைத் தம் திருவாயால் தெளிய உணர்த்தும் திருப்பாடல் இது. |
|